Saturday, July 7, 2007

தொட்டால் பூ மலரும் (யுவன் ஷங்கர் ராஜா)

ஹிந்தியில் ஆரம்பித்து, ஒமர் கய்யாமை இழுத்து, மெலிதான தாளத்துடன் அரபு நாடே தாலாட்டுகிறது. ஹரிசரணின் தேர்வும் கச்சிதம். விட்டால் சூரியனை பாடலில் ரன்ஜீத்தின் உயிரோட்டமுள்ள குரலும், இசைச்சேர்கையும் சுண்டியிழுக்கின்றன. வாடி வம்புப்பெண்ணே ரகுமானை நினைவுபடுத்தினாலும் மனதில் ஒட்டவில்லை. என்னப்பிடிச்சவும் அதே ரகம்தான். விஜய் யெஸுதாஸின் வளையல் கரங்களை பாடலில் இனிமையான வாத்தியச்சேர்க்கை இருப்பினும் நினைவில் நிற்கும் அளவு பெரிதாக ஒன்றும் இல்லை. கடத்துறேன் நான் உன்ன குத்து பாடல்களின் இலக்கணத்தில் தொடங்கினாலும், அதற்குரிய மற்ற உத்திகள் இல்லாமல் சற்று வலுவில்லாமலேயே ஒலிக்கிறது. பி.வாசு, இளையராஜாவிடமிருந்து பெற்ற பாடல்களைப்போல் மகனிடமிருந்து கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

Tuesday, June 26, 2007

கிரீடம் (G.V.பிரகாஷ்குமார்)

அக்கம் பக்கம் மற்றும் விழியில் பாடல்களில், இனிமையான பின்னணி இசையும், ரம்மியமான ராகங்கள் இருந்தாலும் இசையமைப்பாளரின் தனித்துவம் இல்லை - ஆரம்பகால ரகுமானை நினைவுபடுத்துகிறது. நாம் எண்பதுகளில் விட்டுத்தொலைத்த சோகமே உருவான 'pathos' பாடலை மீண்டும் கண்ணீரில் கேட்கலாம்...உம்ம்...கேட்க வேண்டாம். தல அஜித் இருந்தால் தலையின் அறிமுக பாடல் இருந்தாக வேண்டுமே...இருக்கிறது...விளையாடு விளையாடு. ஆனால் பாடல் என்னவோ தட்டுத்தடுமாறி எங்கெங்கோ செல்வதால் மனதில் பதிய மறுக்கிறது. கடைசியாக, நா.முத்துகுமார் கனவெல்லாம் பாடலில், தந்தை-மகன் உறையாடலில் பிரமாதப்படுத்துகிறார். இசையும் பக்கபலம். சில நல்ல மெட்டுக்கள் இருந்தாலும் G.V.பிரகாஷ்குமாரின் முந்தைய இரு படங்களின் தனித்துவம் ஏனோ இங்கே இல்லை - ஒரு சராசரி புதிய தலைமுறை தமிழ் இசையமைப்பாளர்தான் தென்படுகிறார்.

Tuesday, June 19, 2007

சிவாஜி (ஷங்கர்)

முன் வழுக்கை/ வழுக்கை. வயதின் ரேகைகள் எளிதாக தெரியும் முகம். முதிர்ந்த நடை. சற்றே பழைய ஸ்டைல் உடைகள். வழக்கமான, நன்கு பழக்கப்பட்ட அறிமுக காட்சி. இப்படி, ரஜினியிலும், அவரது படங்களிலும் வரும் எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து, நேர்த்தியாக்கி, மிக பிரமாண்டமான ஒரு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

கோட்டை விட்டது ஒன்றை மட்டுமே - அவரது சமூக கருத்து சொல்லும் படங்களில் உள்ள நடுத்தர வர்க நம்பகத்தன்மை. ரஜினியின் படங்களின் மார்க்கெட்டை பார்த்தால் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.

புதியதொரு சிகையலங்காரத்தில் முதல் பாதியில் காமெடி ரஜினி, இடைவேளைக்கு சற்றே பிறகு நமக்கு பழக்கமான பாட்ஷா ரஜினியாக மாறி வில்லனுக்கு சவால் விடுகிறார். கடைசியில் மொட்டை அவதாரத்தில் வந்து பின்னி பெடலெடுக்கிறார் சூப்பர் ஸ்டார். விவேக்கின் கதாபாத்திரம் ஷங்கரின் கற்பனைக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு - அவ்வளவு சரியான விகிதத்தில் சிரிப்பு மற்றும் பக்கவாத்தியம்.

அடக்கி வாசித்து வில்லதனத்தில் அள்ளுகிறார் சுமன். ஷ்ரேயா வழக்கமான, குளிர்ச்சியான ஷங்கர் கதாநாயகி. எம்.ஜீ.ஆர், சிவாஜி, கமல் என பல முயல்களை லாவகமாக, தொப்பிகுள்ளிருந்து சரியான நேரத்தில், ரசிகக்கண்மணிகளின் எதிர்பார்ப்பிர்கிணங்க எடுக்கிறார் இயக்குனர்.

பல்லேலக்கா பாடல் காட்சி, ஷங்கர் புதிதாக எதையும் யோசிக்கவில்லை என்பதையும், ஸஹானா பாடல் காட்சி, என்னதான் பிரமாண்டம் இருந்தாலும் அலுக்கலாம் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அதிரடியும், வாஜி வாஜியும் பட்டையை கிளப்புவது உண்மை! ரகுமானின் பின்னணி இசை அதிர்வேட்டு விருந்து.

ஷங்கரின் பட வரிசையை பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஒரு சமூக கருத்துள்ள படத்திற்க்கு பிறகு ஒரு ஜாலி படம் என்ற ஃபார்முலா. ஜென்டில்மேன் - காதலன். இந்தியன் - ஜீன்ஸ். முதல்வன் - பாய்ஸ். அந்நியன் - சிவாஜி? இந்த படத்தில், கருத்து என்ற போர்வை, ரஜினியின் இமேஜுக்கு முன்பு சுத்தமாக அடிபட்டு ஓட்டையாகிறதால் ஷங்கர் தனது ஃபார்முலாவை சரியாக பின்பற்றியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு நிஜம் பயங்கரமாக உறுத்துகிறது - ரஜினியின் வயது. பல இடங்களில் அப்பட்டமாகவும், பாடல்களில் அந்த தளர்ச்சி, என்னதான் நடன இயக்குனர்கள் கடுமையாக உழைத்திருந்தாலும், நன்றாகவே தெரிகிறது. என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரும் ஒரு 58 வயது மனிதர். இந்த ஒரு தருணத்தில், வயதுக்கேற்ற முடிவுகளை எடுக்கவில்லை என்றால், அவரே அவரது கேலிச்சித்திரமாக மாறும் சாத்தியங்கள் அதிகம்.

அவரது மகளின் சுல்தான் என்ற கார்ட்டூன், அந்த விதத்தில், சூப்பர் ஸ்டார் என்ற மாயையை தொடர ஒரு சரியான முயற்ச்சி.

Thursday, June 14, 2007

சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா)

ஒரு குழந்தையை பார்த்து பாடப்படும் பாடல் என்ற நோக்கில் பார்க்கையில், அழகு குட்டியில் ஓசையும் அதிகம், ஷங்கர் மஹாதேவனின் குரலின் கடுமையும் அதிகம். யுவனின் ஆரம்ப கால, அனுபவமற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது ஓ இந்த காதல். அத்நான் ஸாமியும் தமிழை உணர்ச்சியின்றி கடித்து துப்புகிறார். நல்லவேளையாக வீவா குழுவினரின் தமிழ், பேசுகிறேன் பேசுகிறேன் பாடலில் பரவாயில்லை. பாடலின் இசையும், ராகமும் ரசிக்கதக்க வகையில் மயக்குகின்றன. சாதாரணமாக அனுஷ்காவிற்க்கு ஒதுக்கப்படும் எந்த குதிரையில் பாடலை ஷ்ரேயா கோஷால் ஒரு கை பார்த்து, பிரமாதப்படுத்துகிறார். யுவனின் பின்னணி இசையும், உலக இசையை குழைத்து நா.முத்துகுமாரின் வரிகளோடு நன்றாகவே இணைகிறது இந்தப்பாடலில். சுதா ரகுநாதன், தனது வழக்கமான திரைப்பாடல்களிலிருந்து மிகவும் விலகிய ஒரு விதத்தில் பாடி காதல் பெரியதாவில் கலக்குகிறார். காதலையும் காமத்தையும் ஒன்றோடு ஒன்று மோத வைப்பதில் நா.முத்துகுமாரும், அரேபிய இசையின் மெல்லிய சாயல் கொண்ட இசை சேர்க்கையில் யுவனும் மிளிற்கின்றனர். இயக்குநர் வஸந்த் யுவனின் பாடல்களை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததாலோ என்னவோ...கூட்டிக்கழித்து பார்த்தால், யுவனும் வஸந்தும் இணைந்த பூவெல்லாம் கேட்டுப்பாரின் பாடல்களை விட சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.

Sunday, June 10, 2007

திருத்தம் (ப்ரவீன் மணி)

குத்து பாடல்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் உன்னத பணியை படவா கைய புடிடா செய்கிறது - பெயரை கேட்டாலே தெரியவில்லை? தூங்கி வழியும் எஸ்.ஏ.ராஜ்குமாரை காப்பியடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை போல் உள்ளது, லாபம் யோகம். அறுபதுகளில் வெளி வந்த தத்துவ பாடல்களைப்போல் வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பாதை தெரிகிறதில் பாதையையும் சேர்த்து எதுவும் தெரிகிறார்போல் இல்லை. ஆனால் காதல் கண்மணியை மட்டும் உன்னி மேனன் காப்பாற்றிவிடுகிரார் - பின்னணி இசையும் பிரமாதம். கருவாப்பையாவின் மாய வார்த்தை ஜாலத்தை (!) மீண்டும் நினைவுபடுத்தும் - பெண்பாலில் - சிடுமூன்ஜி தேவதையே, அந்த பழதில் இருந்த எளிமை இதில் இல்லாததால் மனதில் ஒட்டவில்லை. ஒரு சில பெரிய இசையமைப்பாளர்களோடு இணைத்து பேசப்பட்டதை தவிர, ப்ரவீன் மணி, திருத்தம் போன்ற உயிரற்ற இசையில்தான் தனது தனித்துவத்தை கண்டுகொள்கிறார் போல!