முன் வழுக்கை/ வழுக்கை. வயதின் ரேகைகள் எளிதாக தெரியும் முகம். முதிர்ந்த நடை. சற்றே பழைய ஸ்டைல் உடைகள். வழக்கமான, நன்கு பழக்கப்பட்ட அறிமுக காட்சி. இப்படி, ரஜினியிலும், அவரது படங்களிலும் வரும் எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து, நேர்த்தியாக்கி, மிக பிரமாண்டமான ஒரு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
கோட்டை விட்டது ஒன்றை மட்டுமே - அவரது சமூக கருத்து சொல்லும் படங்களில் உள்ள நடுத்தர வர்க நம்பகத்தன்மை. ரஜினியின் படங்களின் மார்க்கெட்டை பார்த்தால் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.
புதியதொரு சிகையலங்காரத்தில் முதல் பாதியில் காமெடி ரஜினி, இடைவேளைக்கு சற்றே பிறகு நமக்கு பழக்கமான பாட்ஷா ரஜினியாக மாறி வில்லனுக்கு சவால் விடுகிறார். கடைசியில் மொட்டை அவதாரத்தில் வந்து பின்னி பெடலெடுக்கிறார் சூப்பர் ஸ்டார். விவேக்கின் கதாபாத்திரம் ஷங்கரின் கற்பனைக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு - அவ்வளவு சரியான விகிதத்தில் சிரிப்பு மற்றும் பக்கவாத்தியம்.
அடக்கி வாசித்து வில்லதனத்தில் அள்ளுகிறார் சுமன். ஷ்ரேயா வழக்கமான, குளிர்ச்சியான ஷங்கர் கதாநாயகி. எம்.ஜீ.ஆர், சிவாஜி, கமல் என பல முயல்களை லாவகமாக, தொப்பிகுள்ளிருந்து சரியான நேரத்தில், ரசிகக்கண்மணிகளின் எதிர்பார்ப்பிர்கிணங்க எடுக்கிறார் இயக்குனர்.
பல்லேலக்கா பாடல் காட்சி, ஷங்கர் புதிதாக எதையும் யோசிக்கவில்லை என்பதையும், ஸஹானா பாடல் காட்சி, என்னதான் பிரமாண்டம் இருந்தாலும் அலுக்கலாம் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அதிரடியும், வாஜி வாஜியும் பட்டையை கிளப்புவது உண்மை! ரகுமானின் பின்னணி இசை அதிர்வேட்டு விருந்து.
ஷங்கரின் பட வரிசையை பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஒரு சமூக கருத்துள்ள படத்திற்க்கு பிறகு ஒரு ஜாலி படம் என்ற ஃபார்முலா. ஜென்டில்மேன் - காதலன். இந்தியன் - ஜீன்ஸ். முதல்வன் - பாய்ஸ். அந்நியன் - சிவாஜி? இந்த படத்தில், கருத்து என்ற போர்வை, ரஜினியின் இமேஜுக்கு முன்பு சுத்தமாக அடிபட்டு ஓட்டையாகிறதால் ஷங்கர் தனது ஃபார்முலாவை சரியாக பின்பற்றியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு நிஜம் பயங்கரமாக உறுத்துகிறது - ரஜினியின் வயது. பல இடங்களில் அப்பட்டமாகவும், பாடல்களில் அந்த தளர்ச்சி, என்னதான் நடன இயக்குனர்கள் கடுமையாக உழைத்திருந்தாலும், நன்றாகவே தெரிகிறது. என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரும் ஒரு 58 வயது மனிதர். இந்த ஒரு தருணத்தில், வயதுக்கேற்ற முடிவுகளை எடுக்கவில்லை என்றால், அவரே அவரது கேலிச்சித்திரமாக மாறும் சாத்தியங்கள் அதிகம்.
அவரது மகளின் சுல்தான் என்ற கார்ட்டூன், அந்த விதத்தில், சூப்பர் ஸ்டார் என்ற மாயையை தொடர ஒரு சரியான முயற்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment