Saturday, June 2, 2007

தெம்புஸ் ஃபுஜித் (Tempus Fugit) - கமலஹாசனை கவர்ந்த ஸ்பெயின் நாட்டு படம்!

கமலஹாசனின் பல தமிழ்ப்படங்கள் ஆங்கில மொழி படங்களின் மிகத்திறமையான தழுவல்கள் என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. தெனாலி (What about Bob?), அன்பே சிவம் (Planes, Trains and Automobiles), அவ்வை சண்முகி (Mrs. Doubtfire), பஞ்சதந்திரம் (Very bad things), சதிலீலாவதி (She devil), மகளிர் மட்டும் (Nine to five), நம்மவர் (To sir with love)...என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ஆனால், கடந்த 2004ம் ஆண்டு, கமலின் 51வது பிறந்த நாளையொட்டிய பேட்டி ஒன்றில், தான் ஒரு ஸ்பெயின் நாட்டு படத்தின் மறுபதிவு உரிமையை பணம் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளதை அறிந்ததும் என் ஆர்வம் தூண்டபட்டது. அந்தப்படம் எதை பற்றியது, எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கினேன்.

ஒருவழியாக சென்ற வாரம்தான் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு (சரியான சொல், 'பாக்கியம்'!) கிடைத்தது. தெம்புஸ் ஃபுஜிட் (time flies, காலம் பறக்கிறது) தொலைக்காட்சிக்காக (ஸ்பேயின் நாட்டு TV3) தயாரிக்கபட்ட ஒரு சிறு பட்ஜெட் படம். பார்சிலோனா பக்கம் பேசப்படும் கதலான் மொழியில் உருவாகியுள்ள படம்.

ஆனால் இப்படம் கையாளும் கதைக்களம் அற்புதமானது. ஹாலிவுட்டிற்கே உரிய காலப்பயணம் (Time travel) மற்றும் தனி ஒருவன் உலகத்தையே காப்பற்றக்கூடிய super hero போன்ற கதை அமைப்பை கோண்ட இந்தப்படம் அது போன்ற மிக பிரம்மாண்டமான விஷயங்களை, சதாரணமாகவும், நேர்த்தியாகவும், மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் பயன்படுத்துகிறது.

மிகுந்த சாகசத்துடன் உலகை காப்பாற்றும் கதாநாயகனை மறந்துவிடுங்கள். காலத்தில் பின்னோக்கி சென்று சொந்த அப்பாவையே இளைஞனாக பார்த்து பேசி வரும், Back to the future போன்ற முரண்பாட்டு வேடிக்கையும் இங்கு இல்லை. காலப்பயணத்தை பற்றி இருந்தாலும் நமது கதாநாயகன் பயணிப்பதோ சொற்ப நாட்களே - சில சமயம் அரை நாள் பின்னோக்கி, சில சமயம் 6-7 நாட்கள் முன்னே...அவ்வளவுதான்!

ஆனால் பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்ற கோட்பாடு, சிறு, அசாதாரண, ஆரம்ப நிகழ்வுகள், மிகப்பெரிய பின்விளைவுகளை உருவாக்கும் என்கிறது. இப்படத்தின் கதாநாயகன் மிகச்சாதாரண watch repairகாரன்! அவன் வாழ்க்கையில் ஒரு எதிர்கால மனிதன் வந்து, "உன்னால் தான் உலகத்தை காப்பாற்ற முடியும்" என்று சொல்லும்போது நமக்கும் தூக்கிவாரி போடுகிறது!
அப்படி உலகை காப்பாற்ற அவன் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம் - தினமும் காலையில் செய்தித்தாளுடன் வாங்கும் மிட்டாயை ஒரு நாள் வாங்காமல் இருந்தால் போதும்! இந்த ஒரு அற்பமான விஷயம் உலகை எப்படி காப்பாற்ற உதவும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது!

படத்தின் கதையை அப்பட்டமாக சொல்லாமல், வேறு ஒரு உதாரணம் சொல்கிறேன்! உங்கள் அம்மா வடாம் காயப்போட உங்களை மொட்டைமாடிக்கு அனுப்ப, அங்கு நீங்கள் அடுத்த வீட்டு மல்லிகாவை பார்த்து வழிய, அதை மல்லிகாவின் புருஷன் பார்த்து, கோபப்பட்டு உங்கள் வீட்டிற்க்கு வந்து சத்தம் போட, சண்டை முற்றி கைகலப்பில் போய், அவமானம் தாங்காமல் உங்கள் அப்பா நாக்பூர் டிரான்ஸ்ஃபர் வாங்க, சுட்டுப்போட்டாலும் ஹிந்தி வராமலிருந்த உங்களுக்கு அங்கு பல வருடம் பள்ளி, கல்லூரியில் பயின்றதால் ஹிந்தி பிரமாதமாக வர, நீங்கள் மும்பையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக, பின் ஹிந்தி படங்களில் நடிக்க, உங்களுக்கு தமிழ் தெரிந்ததால், தமிழிலும் பெரிய நடிகனாக...இது எல்லாவற்றுக்கும் காரணம் அப்பாவி வடாம் என்று உங்களுக்கு தெரியவா போகிறது?

எதிர்கால மனிதன் நமது கதாநாயகனை ஏன் தேர்ந்தெடுத்தான் என்பது சுவாரசியமான கதை - மிகச்சாதாரணமான அவன் இதை வேறு எதற்கும் பயன்படுத்த வக்கில்லாமல், பதிலுக்கு முரண்டுபிடிக்காமல் இருப்பான் என்பதால் மட்டுமே! ஆனால் அவன் செயலால் நிகழும் chain reaction உலகை காப்பாற்ற உதவும் என்பது மட்டும் உண்மை!

இதற்கு நேர்மாறாக காலப்பயணம் செய்ய உதவும் மாத்திரைகள் ஒரு தீவிர ஃபுட்பால் ரசிகனிடமும் சென்றடைகிறது. அவன் எவ்வாறு 6 நாட்கள் எதிர்காலத்தில் சென்று தான் விரும்பும் அணி finalsஇல் வெற்றி பெற்றதா என்று பார்க்கப்போய், அங்கு அவனது எதிர்கால 'அவனை' பார்த்து, இருவரும் (ஒருவரும்?) நண்பர்களாகும் குழப்பமான வேடிக்கை துணைக்கதையும் இப்படத்தில் உண்டு!

கமல் எவ்வளவு ரசனையுடன் மற்ற தழுவல்களை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் போது தெம்புஸ் ஃபுஜிட்டையும் மிக நேர்த்தியாக உருவாக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. தவிர, மற்ற தழுவல்களைப்போல் இல்லாமல் மூலக்கதையை இங்கே தைரியமாக சுட்டிக்காட்டலாம்!

Poster courtesy: IMDB.com

2 comments:

Unknown said...

Nalla Tamizh ezhuthireenga :)

Kalakkunga Karthik

Karthik S said...

Mikka nandri Sanjeevi!